அறைகூவல்

Giridharan Raghuraman
1 min readMar 1, 2022

கதிரவன் சோம்பல் முறித்தெழும் காலையில்

காபிக்கோப்பையும், இங்கிலிஷ் பேப்பருமாய்க்

கருமமே கண்ணாக, கடமையே கருத்தாக

மொட்டை மாடியில் சாய்வு நாற்காலியில்

இனிதே தொடங்கியது நாள்

பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்குப்

பத்து நிமிடம் தாமதமாய் வந்தவர்

கண்கூசும் கதிரையே பார்த்தவர்

உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார் — ஊடே

கறுவினார்

பக்கத்து வீட்டுக்காரனின் சொகுசு எனக்கில்லையென!

ஆதவன் எழும் அழகைக் காணும் கொடுப்பினை எனக்கில்லையென!

உடற்பயிற்சி செய்ய நேரம் இருக்கிறது அவனுக்கு

ஓடலாம், ஆடலாம் — வேலையே இல்லை போலும் என

இவர் இங்கு சூடாகிறார்

காபியின் ஆவியோடு

”குப்பைம்மா குப்பை” எனும் ஓசை கேட்கின்றது

மொட்டை மாடியின் கட்டைச் சுவர் நோக்கி

சட்டென ஓடுகின்றனர்

கொடுப்பினை பற்றிப் புலம்பியவர் — ஓடி

ஐயா, நீர்

காப்பாளர் என்றார், கடவுள் என்றார்

வீரர் என்றார், மீட்பர் என்றார்

உதவி, சேவை என்றார், உதவும் சேனை என்றார்

தொண்டு என்றார், தியாகம் என்றார்

நல்லவர் என்றார், நன்றி என்றார்

கை தட்டினார், கரகோஷம் எழுப்பினார்

தட்டை அடித்தார், தகரம் உடைத்தார்

தீபம் ஏற்றி, தீரம் புகழ்ந்தார்

விளக்கொன்றைப் பிடித்து வீரப் பிரதாபம் பாடினார்

கண்கூசும் கதிர் தாண்டி

அண்ணாந்து நோக்கும் ’குப்பைக்கார அண்ண’னுக்கு

சூரியனைப் பார்த்து ஏதோ குரைப்பது போலிருந்தது

புரிந்து கொள்ள அவருக்குக் ‘கொடுப்பினை’ இல்லையோ என்னவோ?

புல்லரித்தல் படலம் முடிந்து

பரிதாபப் படலம் தொடங்கியது

உச்சுக் கொட்டினர், உதட்டைப் பிதுக்கினர்

பாவம் என்றனர், பரிந்து உருகினர்

ஆண்டவனிடம் முறையிட்டனர்

சரியாகி விடும் என்றனர்

சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் முடிந்து

கீழிறங்கி

வெந்நீரில் குளித்து வெதுவெதுப்பாகி

மடிக்கணினி முன் அமர்ந்து

வீடு, வெறுப்பு என அரற்றினர்

மனத்திற்கு மட்டுமே தெரியும்

இன்னமும் இருபது, முப்பது நாள் வேண்டினர் என்று!

First published in Pens Turf on May 3, 2020

--

--