அவலமே நிரந்தரம் — ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து

Giridharan Raghuraman
2 min readMar 1, 2022

கற்பனைகளுக்கிருக்கும் சக்தியைவிட வாழ்வில் சந்திக்கும் சம்பவங்களைக் கதையாய் வடித்தலில் இருக்கும் ஈர்ப்பு அபாரமானது. அவலச்சுவையையும், சோக நிகழ்வுகளையும் காட்சிப்படுத்துதலில் செயற்கைத்தன்மையின்றி வெளிப்படுகின்றன ராம் தங்கத்தின் ‘திருக்கார்த்தியல்’ தொகுப்பில் உள்ள அனைத்துச் சிறுகதைகளும். திடுக்கிடவைக்கும் எதார்த்தங்களும், பாத்திரங்களின் வடிவமைப்பும் ஒவ்வொரு கதைக்குப் பின்பும் சற்றே இதயத்தை உலுக்கிப் பிசைவதை நன்கு உணர முடிகிறது. அதற்கு முக்கிமானதொரு காரணம் கதைமாந்தரில் மையப்பாதிரமாய் வருவது பெரும்பாலும் பதின்வயது சிறுவர்கள்தாம்.

முன்னுரையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனே குறிப்பிட்டுள்ளது போல, எவ்விதச் சொல்லலங்காரங்களும், வாக்கிய மாயங்களுமின்றி, நேரடி அனுபவத்தால் மட்டுமே சாத்தியப்படிருக்கும் சிறுகதைகள் அடங்கிய நூல் இது.

தலைப்புக்கதையும், நூலின் முதல் கதையுமான ‘திருகார்த்திய’லில் வரும் செந்தமிழின் நிறைவேறா ஆசை, பண்டிகைகள் யாருக்கானவை எனும் கேள்வியை அழுத்தந்திருத்தமாய் வைப்பதை எளிதாகக் கடக்க முடியவில்லை. இனிப்பும், பலகாரங்களும், வெடிகளும், வாணங்களும், ராட்டினங்களும் கொண்டாட்டத்தின் இன்ன பிற இதர வெளிப்பாடுகளும் இம்மியளவிற்குக் கூட வாய்க்கப்பெறாத மனிதரின் அவாவும், ஏக்கங்களும் எளிமையானவை. அவையும் கூட, கோடையில் கிடைக்கும் நீரைப் போல எல்லா நேரங்களிலும் பூர்த்தியாவதில்லை.

‘பானி’ கதையில் வரும் பானி கதாபாத்திரத்தைப் படிக்கும்போது, மளிகைக்கடையில் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் நினைவு வந்துகொண்டே இருக்கிறது. திரைப்படங்களைப் பார்த்துப் பழகிப்போன மனதுக்கு, பானி கதாபாத்திரம் ஒரு சாயலில் ’பிதாமகன்’ விக்ரமின் பாத்திரத்தை ஒட்டியே பயணிப்பது புலப்படுகிறது. ஆங்காங்கே ‘அபியும் நானும்’ படத்தின் ரவி சாஸ்திரியின் பாத்திரப் படைப்பையும் ஒத்திருப்பது தெரிகிறது. ஊரில் அசம்பாவிதம் நிகழும்போது பதறிப்போய் அதைத் தடுக்கவும் முடியாமல், முறையிடவும் முடியாமல் தவிக்கும் கணத்தில் பானி, ‘நானும் ரௌடிதான்’ படத்தில் காதம்பரியின் தந்தை கத்தியால் குத்திக் கொல்லப்படும்போது பதறி ஓடி வந்து வினோதமான சைகைகளைக் காட்டி முறையிடும் மனிதனையும் கண்முன் கொண்டுவருகிறான்.

வித்தியாச வேறுபாடுகளின்றி ஒவ்வொரு கதையிலும் இறுதி நிகழ்வு ஏதேனும் ஒரு வகையில் மனதைச் சஞ்சலப்படுத்திக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் உயிரிழப்பை ஒட்டியதாகவோ, பிரிவின் ஆற்றாமை சார்ந்ததாகவோ இழைந்தோடும் சோகம், வாசகனைக் கவ்வி ஆட்டுவிக்கிறது.

தனக்கு முன் தம்பிக்கு நடக்கவிருக்கும் திருமணம் காரணமாக வீட்டில் கேட்க நேரும் சுடுசொல், அண்ணனைத் தனியாக வாழ உந்துகிறது. ஓவியனான அவன், பெற்றோருடன் வசித்த வீட்டைக் காலிசெய்து சென்றபிறகு, அவனது அறையைத் திறந்து பார்க்கும் தாய் நொடிப்பொழுதில் அனுபவிக்கும் சொல்ல முடியாத வெறுமை (விரிசல்).

நான்கு வருடத்திற்கொருமுறை பலி விழும் வீட்டில் தனக்குப் பதிலாக அப்பாவின் உயிர் பறிபோனதை உணர்ந்து மகன் வெடித்தழும் உணர்வு (முற்பகல் செய்யின்).

இவையனைத்தின் உச்சமாக அமைகிறது நூலின் இறுதிக்கதையான ‘கடந்து போகும்’. மாட்டிறைச்சிக் கடையில் வேலை செய்யத் தொடங்கும் சிறுவன் தோல் வியாதியால் அவதிப்படுகிறான். லேசான காய்ச்சல், இயலாமை என்ற அளவிலேயே கவனத்தில் கொள்ளப்படும் அந்நோய் இறுதியில் அவனது உயிரைப் பறிக்கிறது. அக்கடைசி நாள் நிகழ்வுகள் அனைத்தும் படிக்கும் நேரத்தில் அழ வைக்கும் பக்கங்கள். ‘தன் உடல்நிலையைப் பாதிக்கும் அவ்வேலைக்கு இனி செல்ல வேண்டாம்’ என்று முடிவெடுக்கும் சிறுவன் வினோத், அடுத்த நாள் காலையில் முதலாளி கூப்பிட்டனுப்பியதாகக் கடையாள் வந்து வீட்டு வாசலில் நிற்கும்போது சற்றும் யோசிக்காமல் உடனே வேலைக்குப் போகிறான். ‘தனக்காகச் சொல்லியனுப்பியிருக்கிறார்களே!’ என்று சிந்திக்கும் எளிய சிறுவனின் மனதை எளிதாகப் பயன்படுத்துகிறது முதலாளி மனம். கதையின் கடைசிப் பத்திகள் பின்வருமாறு முடிகின்றன.

“ஒரு கிலோமீட்டர் நடந்து போவதற்குள் சி.எஸ்.ஐ. சர்ச்சில் மூன்று மணி வசனமும் ஒலித்துவிட்டது. இதற்குமேல் ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியாதபடி ஹாஸ்டல் கிரவுண்ட் எதிரே இருந்த வீட்டு கேட்டின் முன்பு சாய்ந்து உட்கார்ந்தான். நாக்கில் ஊறிய எச்சியும் அடங்கிப் போனது.

தெரு நாய்கள் வினோத்தின் முன்னால் நின்று குலைத்தன. அதனை விரட்ட பெலனில்லை. அப்படியே தரையில் படுத்தான். காலில் இருந்த செருப்பைக் கழற்றினான். கொஞ்ச நேரத்தில் நாய்களின் சத்தம் அடங்கியது. ஒரு நாய் வினோத்தின் கால் பாதங்களை நக்கிக் கொண்டிருந்தது. இன்னொரு நாய் அவன் சட்டையைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. வினோத் அசையவில்லை.”

நோய்வாய்ப்பட்டுச் சாவின் விளிம்பில் இருக்கும் நிலையிலும் வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்ப முடியாமல் நட்டநடு வழியில் சாக நேரும் துயரத்தை இதைவிட வலிமையாய் எந்தப் புத்தகமும் சொன்னதாக நினைவில்லை.

சோகமே இழையோடினாலும் இருளில் வெளிப்படும் மின்மினியாய்க் கதைகளினூடே வரும் டாக்டர் அக்காக்களும், பேரன் தான் வேலை செய்யும் கடையிலிருந்து திருடி வந்த தின்பண்டத்திற்குப் பணம் கொடுக்கும் கண்டுகொள்ளப்படாத வயசாளிப் பாட்டிகளும் கூறவருவது, ‘அவலத்திலும் இனிமை காண்போம்’ எனும் நம் தேசத்தின் தலைவிதியைத் தானோ?

நூல்: திருக்கார்த்தியல்
ஆசிரியர்: ராம் தங்கம்
பக்கங்கள்: 208
விலை: 170
வெளியீடு: வம்சி புக்ஸ்

First published in Pens Turf on March 17, 2020

--

--