செவிப்பறையைக் கிழிக்கும் மௌனம்

சகல கோடி பேர்களும் கூடுவிட்டுக் கிளம்பிய பின்
வீடு எனை ஆட்கொள்கிறது

அமைதி
தனிமை
சுவர்கள்
கொடியில் காயும் துணிகள் — இவை போகக்
கூடம்
படுக்கையறை
சமையலறை
திண்ணை என அனைத்தும்
ஓவென நிசப்தத்தால் அறைகின்றன

பகலில் வீட்டிலும் இரவில் பணியிலும் இருக்கச் செய்தது
கடவுளோ கந்தசாமியோ தெரியாது
ஆளரவமற்ற நண்பகலில்
உலுக்கப்படுகின்றன இதயக் கதவுகள்
லேசாய்த் தொடங்கிப் பின்
பூதாகாரமாய் வெடித்துச்
சம்மட்டியால் பிளக்கின்றன
லப்டப் ஓசைகள்

தேடலும் ஊடலுமற்ற வெற்றுப் பார்வை
சாளரத்தின் ஒற்றைக் கம்பியை வெறித்துப் பார்க்கிறது
இமைக்கா நொடிகளின் இடைப்பட்ட நேரத்தில்
பிரவாகமெடுக்கின்றன
காரணமற்ற கரைகளற்ற நீர்த்திவலைகள்
இலையோர நீர் போல
விழித்திரை மறைக்கும் படலம்
மெல்ல விலகிச் சிதறித் தரையில் தெறிக்கிறது

உள்ளே உயிர்க்கும் பற்பல ஓசைகளும்
முகிழ்த்தவாறே மரிக்கின்றன
வெளிப்படாமலேயே
நடுங்கும் கைகள் மயிர்க்கூச்செறிகின்றன
கால் விரல்கள் முருங்கையாய் வளைகின்றன
உலகமே அசைகிற அவ்வேளையில்
கபாலத்தில் உதிக்கும் சூடு
உடலெங்கும் பரவி ஆட்டுவிக்கிறது

ஒன்றியும் ஒன்றாமலும் கரையும் மணித்துளிகள்
இருந்தும் இல்லாமல் மறையும் பொழுதுகள்
இவற்றுக்கிடையே
கீச்சென ஒலிக்கும் ரீங்காரம் ஓங்காரமாகிறது

அலாதியும் கொடுமையுமானது
செவிப்பறையைக் கிழிக்கும் மௌனம்

First published in Pens Turf on March 18, 2020.

--

--