காவலே காவலே

Giridharan Raghuraman
16 min readMar 1, 2022

[முன்குறிப்பு: அனைத்து நிகழ்வுகளும் உண்மை என்றபோதிலும், நான், பாலா தவிர அனைத்துப் பாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.]

23 மார்ச் 2020 — காலை 08:45 மணி

”ஏன்யா உனக்கெல்லாம் அறிவே கெடையாதா? படிச்சவன் தானே நீ? ரெண்டு நாளா பேட்ரோல் போலீஸ் சொல்லிட்டுத்தானே இருக்காங்க தெறக்காதீங்கன்னு. காலங்காத்தால உயிர வாங்குறதுக்குன்னே வருவானுங்க.” திருவொற்றியூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரிடம் வசவு வாங்கிக்கொண்டிருந்தேன். திறந்து வைத்திருந்த இட்லி, வடை பொட்டலத்தின் மணம் மூக்கைத் துளைத்து, நாக்கை வளைத்துக் கொண்டிருந்தது. மணி எட்டே முக்கால் இருக்கும்.

பிரச்சனை இதுதான். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் ’கோவிட்’ தொல்லையால் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. ’ஸ்டடி சென்டர்’ என்று எங்களாலும், ‘டியூசன் சென்டர்’ என்று மாணவர்களாலும் அன்போடு (!) அழைக்கப்படுகிற படிப்பகத்தையும் மூட வேண்டிய சூழ்நிலை. தினமும் காலையில் ஒரு மணி நேரம் மாணவர்களை வரவழைத்து, அன்றைய நாளுக்கான பாடங்களையும், வீட்டுத்தேர்வுக்கான வினாத்தாள்களையும் கொடுத்து, முந்தைய நாளுக்கான வீட்டுப்பாடங்களைச் சரிபார்ப்பதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரண்டு, மூன்று நாட்கள் எல்லாம் சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த வேளையில்தான் 23-ஆம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் ‘லாக்டவு’னில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 22-ஆம் தேதி இது போன்ற ஒரு சம்பவத்தை யூகித்திருந்ததால் அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி மூலம், மறுநாள் சென்டருக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

பிறகு எதற்கு 23-ஆம் தேதி காலை எட்டே முக்காலுக்கு இட்லி-வடை மணமணக்கும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நான் நின்றிருந்தேன்? அதற்குக் காரணம் என்னுடைய முந்திரிக்கொட்டைத்தனம்தான். கொங்கு வழக்கில் சொல்ல வேண்டுமென்றால், “யார்ரா இவன், பொச்ச சாத்திட்டு சும்மா இருக்க முடியாதா?” புதிய வினாத்தாள்கள் தயார் செய்து, வாட்ஸப்பில் புகைப்படமாய் அனுப்பலாம் என்றும், இல்லையென்றால் கையில் எழுதி ஓரிரண்டு மாணவர்கள் மூலமாக அனைவருக்கும் கொடுத்துவிடலாம் என்றும் திட்டமிருந்தது. அதற்குத் தேவையான வினா-விடைப் புத்தகங்களையும், சில பல பழைய கோப்புகளையும் எடுப்பதற்காக அன்று படிப்பகத்தைத் திறந்து நான் மட்டும் எனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு சந்தடி இல்லாமல் இடத்தைக் காலி செய்வதுதான் திட்டம். அதை மனத்தில் கொண்டு வழக்கமான நேரமான ஒன்பது மணிக்குத் திறக்காமல், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரமாய் ஏழே முக்காலுக்கே திறந்தாயிற்று. லட்சுமி கோவில் பேருந்து நிறுத்தத்திற்கருகே ஒரு காம்ப்ளக்ஸின் முதல் மாடியில், மூன்று சிறிய தனித்தனி அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் படிப்பகத்தில், எனக்குத் தேவையான பொருட்கள் இருக்கும் அறை ஷட்டரைத் திறந்து, ஐந்தே நிமிடத்தில் மூட்டை கட்டிவிட்டேன். அப்போதுதான் சுழி தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. “பசங்க புக்ஸ் எல்லாம் பக்கத்து ரூம்ல அங்கங்க கபோர்ட்ல செதறிக் கெடக்கு. எல்லாத்தையும் எடுத்து ஒரே ரூமா வெச்சுட்டுப் போயிட்டா நாளைப்பின்ன இந்த ஒரு மணிநேரம் எப்பவாச்சும் தெறந்தா பசங்கள எடுத்துக்கச் சொல்ல ஈசியா இருக்கும்” என்று கணநேரத்தில் கபாலத்தில் கச்சிதமாய்த் தோன்றிய கற்பனைதான் பிற ஷட்டர்களையும் திறக்க வைத்தது. மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால் உள்ளடங்கி இருக்கும் அறைகள் திறந்திருப்பது தெரியாது; ஆனால் சற்றே சாலையை நோக்கியவாறிருக்கும் ஓரறை நன்று புலப்படும். அப்படித்தான் ரோந்துக்கு வந்த காவலர்கள் என்னைப் பிடித்திருந்தனர். முந்தைய நாள் தான் ஒரு முறை மாட்டியிருந்தேன். “ஸ்கூல், டியூஷன் எல்லாத்தையும்தான் மூடச் சொல்லிட்டாங்கல்ல? அப்புறம் என்ன?’ என்ற ரீதியில் மிரட்டியவர்கள், “லாஸ்ட் வார்னிங்” என்று சொல்லி அனுப்பியிருந்தனர். இன்று உண்மையிலேயே மாணவர்கள் வரப்போவதில்லை என்று எவ்வளவு சொல்லியும் புரிய வைக்க முடியவில்லை. “ஸ்டேஷனுக்கு வந்து இதையெல்லாம் சொல்லு” என்று திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

செல்லும் வழியில் எனக்குப் பெரிய சந்தேகம். கேட்டால் அசிங்கப்படுத்திவிடுவார்களோ என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும் வாயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “எக்ஸ்கியூஸ் மீ சார். ஒரு டவுட்” என்றேன். சற்றே குள்ளமாய் இருந்த காவலர், “என்ன?” என்றார். உண்மையாகவே அவர் என்னை முறைத்துப் பார்த்தாரா, அவர் பேசியபோது குரல் கட்டையாக இருந்ததா, அல்லது திரைப்படங்களில் பார்த்துப் பழகியதால் நான் தான் அப்படிக் கற்பனை செய்தேனா என்று தெரியவில்லை. “ஹெச்-3 ஸ்டேஷன் போகாம ஏன் சார் திருவொற்றியூர் போறோம்?” என்று கேட்டேவிட்டேன். வேறு எதையாவது கேட்டுச் சமாளித்திருக்கலாம்தான், ஆனால் ஆர்வம் யாரை விட்டது! ஹெச்-3 என்பது தண்டையார்பேட்டை காவல் நிலையம். படிப்பகம் அமைந்திருக்கும் பகுதி அதுதான். எனவே எனக்கு அவர்கள் திருவொற்றியூர் கூட்டிச்செல்வது சற்றுத் திகிலாகவே இருந்தது. ‘விசாரணை’ திரைப்படம் போல செய்யாத குற்றத்திற்கெல்லாம் சேர்த்து மட்டிவிட்டு மொத்தமாக நொங்கெடுத்துவிடுவார்களோ என்று சப்தநாடியும் நடுங்கி, ஒடுங்கிக் கொண்டிருந்தது. “இன்னைக்குப் பேட்ரோல் ரிப்போர்டிங் திருவொற்றியூர் ஸ்டேஷன்தான் தம்பி” என்றார் அவர். வழக்கம்போல அவர் உதட்டோரத்தில் தோன்றிய வஞ்சச் சிரிப்பு உண்மையா, கற்பனையா என்று தெரியவில்லை. அவரது பதில் சற்றே என்னை ஆசுவாசப்படுத்தினாலும், உள்ளூறப் பயம் குறைந்தபாடில்லை.

“யோவ், சரி. என்ன நடந்துச்சுன்னு எழுதிக்குடுத்துட்டு ஹெச்-3க்குப் போயிப் பாரு” என்று இன்ஸ்பெக்டர் அலறியபோதுதான் இட்லி-வடையைப் பார்த்துக்கொண்டே மூளை ஃப்ளாஷ்பேக்கிற்குச் சென்றுவிட்டது நினைவுக்கு வந்தது. நினைவலைகளைத் திருப்பி நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தேன். நடந்ததை நடந்தவாறே இம்மி பிசகாமல் நாள், கிழமை, நேரத்துடன் தெளிவாகத் தமிழில் எழுதிக் கொடுத்தேன். ஆங்கிலத்திலும் ஒரு பிரதி கேட்டனர். எதற்கென்று புரியாவிட்டாலும், அதையும் எழுதிக் கொடுத்தாயிற்று. “ஹெச்-3க்குப் போயிப் பாரு” என்று ஏதோ திருமண வீட்டிற்கு வந்தவரைப் பந்திச் சாப்பாட்டுக்கு வற்புறுத்தி அழைக்கும் உறவினர் போல மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூறினார் இன்ஸ்பெக்டர். “அப்பாடா! மண்டைக்கு வந்தது கொண்டையோட போச்சு” என்ற ரீதியில் வெளியே செல்ல எத்தனித்தபோதுதான் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. “டேய் தம்பி, ஒரு நிமிஷம் நில்லு” — நிச்சயமாக இன்ஸ்பெக்டரின் குரல் இல்லை. ஒரு நிமிடம் முதுகெலும்பு துருத்தி உடலை விட்டு வெளியில் வந்து பின் தோலைக் கிழித்து உள்சென்றதைப் போல் முதுகுப் பகுதியில் இனம்புரியாத ஒரு தெறிப்புடன், திரும்பினேன். எதிரே தெரியும் காட்சிகள் மங்கலாவது போல் தோன்றியதால், அனிச்சைச் செயலாகக் கை கண்ணைத் தொட்டது. அப்போதுதான் பயத்தில் கண்கள் லேசாகக் கலங்கத் தொடங்கியிருப்பதை உணர்ந்தேன். அழைத்தவர் ஒரு கான்ஸ்டபிள் என்று பார்த்ததும் எடை போட்டேன். கைகள் தன்னையறியாமல் நிலைகொள்ளாது ஆடத் தொடங்கியிருந்தன. “கூப்ட்டீங்களா சார்?” என்று கேட்கும்போதே குரல் வலுவிழந்து ஒலிப்பது செவிகளில் தெளிவாய்க் கேட்டது. குற்றமிழைக்காத ஒருவனையும் காவல் நிலையம் எத்தகைய மனநிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு அக்குரல் நடுக்கமே சாட்சி. “நீ ஏற்கனவே ஏதோ இந்த டியூஷன் சென்டர் சம்மந்தமா வேற ஒரு கேஸுக்கு வந்திருந்தல்ல?” என்றார். ‘கேஸ்’ என்ற வார்த்தையைச் செய்தித்தாள்களில் படிப்பதற்கும், செய்திகளில் கேட்பதற்கும், பார்ப்பதற்கும், நேரில் அதைக் கேட்க நேர்வதற்கும் கணக்கிலடங்கா வித்தியாசங்கள் உண்டு. அரும்பு மீசையில் வியர்வைத் துளிகள் தென்படத் துவங்கியிருந்தன எனக்கு. முன்நெற்றியிலிருந்து வழிந்த மற்றொரு துளி கண்ணாடியின் உட்புறம் சென்று இடக்கண்ணை மறைத்தது. நான் பேச எத்தனிக்கும் முன்பே, ”லட்சுமி கோவில் பக்கத்தாலன்னுதானே சொன்ன?” என்று என்னைக் கேட்பதுபோல் தனக்குத் தானே கேள்வி கேட்டபடி பழைய கோப்புகளைப் புரட்டத் தொடங்கினார். சற்றேறக்குறைய இரண்டரை நிமிடங்களில் அவரது கையில் ஒரு காகிதம் இருந்தது. மிகவும் பரிச்சயமான கையெழுத்து. சாட்சாத் என்னுடையதுதான். ஆனால், அக்கடிதத்தைப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருக்கவில்லை. அவர் சந்தேகப் பட்டபோதே அவர் எதைச் சுட்டிக்காட்டுகிறார் என்று விளங்கியிருந்தது.

23 மே 2019 — மதியம் 2:30 மணி

“சார், உமா எலிமருந்து குடிச்சிடுச்சாம் சார். எனக்கு ஃபோன் பண்ணிச்சு இப்போதான்” என்றபடி பதற்றமாக வந்து நின்றான் ராஜா. உமாவும், ராஜாவும் சென்டரில் உதவியாளர்களாய்ப் பணிபுரிபவர்கள். ஒன்பதாம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையில், பத்தாம் வகுப்புக்கான பாடங்கள் சென்டரில் தொடங்கியிருந்தபடியால், தினமும் வகுப்புகள் நடைபெற்ற வண்ணமிருந்தன. அன்று காலையிலிருந்தே உடல்நிலை சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த உமா, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகுதான் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி விடைபெற்றிருந்தாள்.

முந்தைய நாள் தன் தந்தை குடித்துவிட்டுத் தவறாக நடந்துகொண்டதாகக் காலையில்தான் விரிவாகப் புலம்பியிருந்தாள். நிலைமையின் வீரியம் புரிந்தபோது பதற்றம் அதிகரித்திருந்தது. பாலா, “நீயும் ராஜாவும் போய்ப் பாத்துட்டு வாங்கப்பா” என்று உடனடியாக என்னிடம் கூறினார். அப்பதற்றத்திலும் நிதானித்து யோசிக்கக் கூடிய நிலையில் அவர் இருந்தது நிச்சயமாக அவரது அனுபவத்தையே காட்டியது. மூவரும் அறைக்கு வெளியே நின்று முணுமுணுப்பதைப் பார்த்து உள்ளே மாணவர்களிடையே சலசலப்பு கூடியிருந்தது. நாங்கள் படியிறங்கியபோது, “ஒரு ரெண்டு நிமிஷம் வெளிய காலெடுத்து வெக்க முடியாதே” என்று பாலா மாணவர்களிடம் கர்ஜிப்பது கேட்டது.

லட்சுமி கோவில் பேருந்து நிறுத்தத்திற்கருகே ஆட்டோ பிடித்து டோல்கேட் பேருந்து நிறுத்தம் வரை சென்றோம். மருந்தைச் சாப்பிட்ட பின்பு, திகிலாக இருந்திருக்க வேண்டும்; தொலைபேசியில் ராஜாவிடம் தான் நின்றுகொண்டிருந்த சரியான இடத்திற்கான அடையாளங்களை மிகத் தெளிவாகவே சொல்லியிருந்தாள் அவள். சொன்ன இடத்திற்குப் போய்ச் சேர்ந்தபோது நெற்றி வியர்க்க ஒரு விதமான குழப்பத்தில் நின்றிருந்தாள். முதலில் கேட்டபோது மருந்து சாப்பிடவில்லை என்று தூங்கி எழுந்த குழந்தை அரைத்தூக்கத்தில் உளறுவதுபோல் பிதற்றினாள். அப்போதே தெரிந்துவிட்டது மருந்து உள்சென்றிருக்கிறது என்று. இறப்பு குறித்து திடீரென்று கலவரமான எண்ணங்கள் வரவே, மருந்தைச் செரிக்க வைப்பதற்காக ஒரு சோடாவையும் மடக்கென்று உள்ளே இறக்கியிருந்தாள். பாலாவிடம் விஷயத்தைத் தெரிவித்தவுடன் அவர், “ஒரு இருபது நிமிஷத்துல சென்டரைக் க்ளோஸ் பண்ணிட்டு வந்துடுறேன்பா. அவளை அப்படியே உக்கார வைங்க” என்றார். சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வந்த அவர், ராஜாவிடம் அவளை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுமாறு பணித்தார். பின்னர் அவரும் நானும் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்குச் சென்று அவள் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கொடுத்துவிட்டு, நாங்கள் யாரென்றும், நடந்த நிகழ்வுகள் என்னவென்றும் விவரித்தோம். ”விஷம் குடித்துவிட்டாள்” என்ற ரீதியில் பதறிக்கொண்டிருந்த எனக்கு, காவல் நிலையத்தில் அவர்கள் அதைக் கையாண்ட விதம் ஆச்சரியத்தையும், சற்றே பதற்றத்தையும் அளித்தது. “மருந்துதானே? என்ன அளவு?” என்று ஏதோ பாலில் சேர்க்க வேண்டிய சர்க்கரையின் அளவைக் கேட்பதுபோல் சாதாரணமாகக் கேட்டனர். பொட்டலத்தைக் காண்பித்தவுடன், “இது இங்க ரொம்ப காமனா நடக்கற விஷயம். என்ன நடந்துச்சுன்னு எழுதிக் குடுத்துட்டுப் போங்க” என்றார் இன்ஸ்பெக்டர். அனைத்தையும் பாலா தமிழில் இம்மி பிசகாமல் எழுத, நானும் அவரும் கையெழுத்திட்டோம். (பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்தேறிய நிகழ்வுகள் மற்றொரு தனிப் பதிவுக்கு உரிய சுவாரசியங்கள் கொண்டவை. பிரச்சனை சரியாகி இரண்டு நாட்களில் மீண்டும் வேலைக்கு வரத் தொடங்கிவிட்டாள் என்பது வேறு விஷயம்.)

அக்கடிதம் பத்து மாதங்களுக்குப் பிறகு ஒரு பிரச்சனையாக வந்து நிற்கும் என்று அன்றைக்கு எனக்கும் பாலாவுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

23 மார்ச் 2020 — காலை 09:15 மணி

”இது என்ன அப்பப்ப எதாச்சு ப்ரச்சன வந்துட்டே இருக்கு உங்களைச் சுத்தி” என்று என்னைப் பார்த்து விளித்துவிட்டு, “சார், இந்த மேட்டரையும் ஹெச்-3க்கு ஃபார்வர்ட் பண்ணணும் சார்” என்றார் கான்ஸ்டபிள். அங்ஙனமே நடந்தேறியது. நான் மீண்டும் அடி மேல் அடியெடுத்து வைத்து (வழக்கமான வேகத்தில் நடந்தபோது கூட கால் சத்தத்தை விட இதயத்துடிப்பின் சத்தம் அதிகமாகக் கேட்டுக் கொண்டிருந்ததால், நடையின் வேகம் குறைவதைப் போன்ற தோற்றம் எனக்குள் உருவாகிக்கொண்டிருந்தது) காவல் நிலையத்தை விட்டு வெளியேறினேன். இம்முறை தடுத்து நிறுத்தி எந்தக் குரலும் என்னை மறுபடியும் கூப்பிட்டு உள்ளே அழைக்கவில்லை.

23 மார்ச் 2020 — காலை 09:50 மணி

“குட் மார்னிங் சார்” என்று தண்டையார்பேட்டை ஹெச்-3 காவல் நிலையத்திலிருந்த முதல் அதிகாரிக்குச் சலாம் அடிக்கும்போதே பிரச்சனை மேலும் பூதாகாரமாவதற்கான அனைத்து வாசல்களும் சட்டெனத் திறந்துவிட்டிருந்தது புரிந்துவிட்டது. ஏனெனில் அந்தக் கான்ஸ்டபிள் சமீபத்தில் ஒரு முறை என் வீடு வரைக்கும் வந்திருந்தவர். அவர் ஏனய்யா என் வீட்டிற்கு வர வேண்டும்?

02 ஜனவரி 2020 — காலை 11:00 மணி

“குட் ஆஃப்டர்னூன். இஸ் திஸ் மிஸ்டர் கிரிதரன்?” என்று கேட்டபோது, அது வழக்கமான க்ரெடிட் கார்ட் அழைப்பாக இருக்க வேண்டும் என்று பொறி தட்டியது. எரிச்சலுடன், “யெஸ், திஸ் இஸ். ஐ டோண்ட் நீட் யுவர் காட்-டேம் க்ரெடிட் கார்ட். வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் காலிங் மீ அட் டிஃபரண்ட் பார்ட்ஸ் ஆஃப் த டே, அன்ட் ஜஸ்ட் ரிமூவ் மை நேம் ஃப்ரம் யுவர் காலிங் லிஸ்ட்?” என்று பொரிந்து தள்ளினேன். மறுமுனையில் இருந்த பெண்மணி சற்றே கடுப்பாகி இருக்க வேண்டும். “எக்ஸ்கியூஸ் மீ சார், திஸ் இஸ் நாட் அபவுட் த காட்-டேம் க்ரெடிட் கார்ட். திஸ் இஸ் அபவுட் ஸஸ்பிஷியஸ் ஆக்டிவிட்டி இன் யுவர் அக்கவுண்ட். வில் யூ ப்ளீஸ் லெட் மீ எக்ஸ்ப்ளெய்ன் த ரீஸன் ஃபார் மை கால்?” என்றபோது உறைந்துபோனேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்று, அத்தகைய பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இரண்டு, “ஸஸ்பிஷியஸ் ஆக்டிவிட்டி” என்ற தொடர் முதுகெலும்பைச் சில்லிடச் செய்தது. சற்றே நிதானித்தவன், “சாரி மேடம், ஐ டிண்ட் மீன் டு அஃபெண்ட் யூ. ஜஸ்ட் தட் யுவர் பேங்க் கிவ்ஸ் வே டூ மெனி கால்ஸ் ரிகார்டிங் க்ரெடிட் கார்ட். அபாலஜீஸ். ப்ளீஸ் டெல் மீ வாட் த இஷ்யூ இஸ்” என்று பணிவாகவே கூறினேன். வாக்கியத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இருந்த மன்னிப்பிற்கான இரண்டு அறைகூவல்கள் அவரையும் ஆசுவாசப்படுத்தியிருக்க வேண்டும். வழக்கமான வங்கி அதிகாரியின் தொனியில் பேசத் தொடங்கினார்.

”டிசம்பர் மன்த்ல உங்க அக்கவுண்ட்க்கு ‘வாசிப்பு ட்ரஸ்ட்’ன்ற அக்கவுண்ட்ல இருந்து ரிப்பீட்டட்டா அமவுண்ட் க்ரெடிட் ஆயிட்டே இருந்திருக்கு. க்ரெடிட் ஆன அமவுண்ட் எல்லாம் எக்ஸாக்டா ட்வெண்டி ஃபோர் அவர்ஸ்க்குள்ள டெபிட் ஆயிருக்கு. வீ நீட் கான்க்ரீட் எக்ஸ்பிளனேஷன்” — புரொஃபெஷனலாகப் பேசி முடித்திருந்தார் அவர். சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லிவிட்டு நிலைமையின் தீவிரத்தைக் கடைசி வாக்கியத்தில் தெள்ளத்தெளிவாக விளக்கிவிட்டிருந்தார். தேர்ந்த வங்கி அதிகாரி என்பது அதிலேயே துல்லியமாகப் புரிந்தது.

விஷயம் இதுதான். டிசம்பர் மாதம் அரையாண்டு விடுமுறை. தினமும் காலையிலிருந்து இரவு வரை சென்டர் நடந்து கொண்டிருந்தபடியால் முழுநாள் செலவுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. முக்கியமாகக் காலை மற்றும் மதிய உணவிற்கு. வாசர் வரதப்பா தெருவிலிருக்கும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது செலவு பெரிதாக இருக்கவில்லை; ஆனால், சாம்பாரில் ஒருமுறை மிதந்த கரப்பான்பூச்சி அதற்குப் பிறகு அங்கு எங்களைத் தலை வைத்தும் படுக்க முடியாதபடி செய்துவிட்டது. அதனால் வழக்கமான விலைகளுக்கு உணவு விற்கும் உணவகங்களிலேயே சாப்பிடத் தொடங்கியிருந்தோம். செலவு அதிகம்தான் என்றாலும் வேலை எளிதாக முடியும். மாணவர்களை வீட்டிலிருந்து உணவு எடுத்து வரச்சொல்வது என்பது கடினமான காரியம். அப்படியே சொன்னாலும் சரியான நேரத்தில் உணவு வீட்டிலிருந்து வந்து சேராது. காலையிலேயே உணவு கட்டி எடுத்து வருபவர்கள் வெகு சிலரே. எனவே அவ்வப்போது பாலா மொத்தமாகப் பணம் அனுப்ப உடனடியாக நான் அதை ஏ.டி.எம்.மில் இருந்து எடுத்து வைத்துக்கொள்வேன். இது வழக்கமான விஷயம்தான் என்றபோதிலும், என்னுடைய அந்த வங்கிக்கணக்கு ‘சேலரி அக்கவுண்ட்’ என்று சொல்லக்கூடிய சம்பளக் கணக்கு. எனவே அதில் மாதத் தொடக்கத்தில் மட்டுமே பண வரவு இருக்க வேண்டும். அது தவிர ஒரு சில வரவுகள் இருக்கலாமே தவிர ஒரேடியாகக் காசு வந்துகொண்டே இருக்கக்கூடாது. மேலும் அவர்களது சந்தேகத்தை வலுவாக்கியிருக்கக் கூடிய விஷயம், வரும் பணம் அனைத்தும் அக்கவுண்டை விட்டு வெளியே உடனடியாகச் செல்கிறது என்பதுதான். ‘மணி லாண்டரிங்’ என்று சொல்லக்கூடிய பணக் கையாடல் தொடர்பான குற்றத்திற்கான முகாந்திரம் அனைத்தும் ஏழு பொருத்தங்களுடன் கூடி வந்து நின்றது. கைப்பேசியிலேயே விரிவாக எடுத்துரைத்தேன். நேரடியாக வங்கிக்கிளை அலுவலகத்திற்கு வந்து எழுதிக் கொடுத்து விட்டுப் போகும்படி கூறினார் அந்த அதிகாரி. தண்டையார்பேட்டையிலிருந்து பாரிமுனைக்கு அடித்துப் பிடித்துச் சென்றேன்.

நேரில் சென்று மறுபடியும் ஒருமுறை வாயில் வடை சுட்டு விளக்கியபின்னர், கடிதமாக எழுதித் தரச் சொன்னார்கள். எழுதிக் கொடுத்தேன். “சாரி சார், திஸ் இஸ் அவர் ட்யூட்டி. வீ ஹோப் வீ டிட் நாட் ட்ரபிள் யூ” என்றபடி புன்னகைத்தார் கைப்பேசியில் அழைத்திருந்த அதிகாரி. “நாட் அன் இஷ்யூ” என்று நான் பொத்தாம்பொதுவாக ஒரு சிரிப்பை உதிர்த்தேன். உள்ளூறக் கோபம்தான். ”பட்டப்பகல்ல ஒரு அப்பாவிக்கு ஃபோனப் போட்டு நீ ஹவாலா மோசடி பண்ணிட்டிருக்க” என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, பீதியில் கிட்டத்தட்ட ஓட்டமும், நடையுமாக கிளம்பி வரவைத்திருந்தனர் (வரும்வழியெல்லாம் ஷேர் ஆட்டோ ஓட்டுநரை வேகமாகச் செல்லுமாறு நச்சரித்துக்கொண்டே வந்திருந்தேன். யார் பெற்ற பிள்ளையோ அவரும் பாவம் எதுவும் எதிர்த்துப் பேசாமல், சலித்துக் கொள்ளாமல் கேட்டுக்கொண்டார்).

“நீங்க சொல்றபடி இந்த அக்கவுண்ட்ல இருந்துதான் உங்களுக்கு சேலரியும் வருது. ஸோ வீ ஹேவ் இனஃப் க்ரவுண்ட்ஸ் டு பிலீவ் திஸ் இஸ் நாட் ய மீடியேட்டர் அக்கவுண்ட் (மீடியேட்டர் அக்கவுண்ட் என்பது முறைகேடான பணப் பரிமாற்றத்திற்கு ஏதுவாக உருவாக்கப்படும் வங்கிக் கணக்கு. யாரிடமிருந்து யாருக்குப் பணம் செல்கிறது என்பதை மறைப்பதற்கான ஒரு எளிய உபாயம் இது). நீங்க என்ன வொர்க் பண்றீங்கன்னும் புரியுது. ஜஸ்ட் மேக் ஷ்யூர் டு வெய்ட் ஃபார் அட் லீஸ்ட் ஃபார்ட்டி எய்ட் டு செவெண்டி டூ அவர்ஸ் ஃப்ரம் த டைம் ஆஃப் க்ரெடிட் பிஃபோர் யூ டெபிட் எனி அமவுண்ட் ஃப்ரம் த அக்கவுண்ட். பீ.ஓ.எஸ். பண்ணலாம் உடனே கூட. பிரச்சனை இல்ல. ஆனா ஏ.டி.எம். டெபிட் இருக்கக் கூடாது” என்று விளக்கினார் மற்றொரு அதிகாரி. ஆயிரம் கோடிகளை விட்டவர்கள், ஆயிரக் கணக்கில் பணப் பரிமாற்றம் நடக்கும் ஒரு கணக்கை இப்படித் துருவுகிறார்களே என்று எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது எனக்கு. இஞ்சி தின்ற குரங்கைப் போல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தேன். பதில் சொல்லும் பொறுமை கூட இருக்கவில்லை எனக்கு. வங்கியில் பதினெட்டு டிகிரியில் ஓடிக்கொண்டிருந்த ஏ.சி.க் குளிரைத் தாண்டி எனக்குப் புழுக்கமாக இருந்தது.

07 ஜனவரி 2020 — மாலை 03:45 மணி

“எப்படியும் கோயம்பேடு வரைக்கும் வருவேன் நானு. உங்க மிஸ் எப்புடியும் கூட வரத்தான் போறாங்க. கரெக்டான பஸ்ஸாப் பாத்து ஏத்திவிடுறேன். ஒண்ணும் பயப்பட வேணாம்” — சென்னை அளவிலான வினாடி-வினாவில் வெற்றிபெற்று மாநில அளவிலான சுற்றுக்குத் தஞ்சாவூர் செல்லவிருந்த நான்கு மாணவர்களிடம் சென்டரில் பேசிக்கொண்டிருந்தேன்.

அவர்களுடன் தஞ்சாவூர் வரை சென்று தங்கி, பத்திரமாக அழைத்து வருவதாகத் தான் திட்டம் இருந்தது. ரயிலிலோ, நல்ல பேருந்திலோ பயண முன்பதிவு செய்வதற்காக பாலா எடுத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் பள்ளி நிர்வாகம் (அதாவது தலைமையாசிரியை) குப்பைக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. உடன்வரும் பள்ளி ஆசிரியர் தவிர, பெற்றோர்கள் யாரேனும் வரலாமே தவிர ‘வெளியாட்கள்’ யாரும் கண்டிப்பாக வரக்கூடாது என்று கூறியதன் மூலம் அவர் எங்களைத்தான் குறிப்பால் சுட்டியிருந்தார் என்பது நான்கு மாணவ-மாணவிகளுக்குமே புரிந்துவிட்டிருந்தது (பள்ளி ஆசிரியர்களுக்கும், எங்களுக்குமான வாய்க்கால் தகராறு பிறிதொறு பதிவில் எழுதக்கூடிய அளவிற்கு ஒரு மெகா சீரியலுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது). ரயில் பயணத்திற்கான எவ்வித ஏற்பாடுகளையும் பள்ளியும் செய்யாததால், கடைசியில் பேருந்தில்தான் பயணம் என்பது பயணத்திற்கு முந்தைய நாள் தெரிந்து விட்டிருந்தது. கோயம்பேடு பேருந்து நிறுத்தம் வரை சென்று அடுத்த நாள் காலையில் அவர்களை அனுப்பிவிட்டு வரலாம் என்பது எனது திட்டமாக இருந்தது.

08 ஜனவரி — காலை 08:15 மணி

”கேப் புக் பண்ணியாச்சு, மிஸ். ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடும். கிளம்பிடலாம்” –மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆசிரியையிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு அப்பாவி. யார் என்ன சொன்னாலும் தலையாட்டும் சுபாவம் கொண்டவர். எனக்கும் பாலாவுக்கும் அவர் எதிரியுமில்லை, நண்பருமில்லை. அதுதான் அவரது நற்குணம். அதுதான் மிகப்பெரிய பிரச்சனையும். பள்ளியின் வாயிலில் அவரும் நான்கு மாணவர்களும் காத்திருக்க, நான் சற்றே ஒதுங்கி ஒரு சந்தில் இருந்து கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தேன். தலைமையாசிரியை பார்த்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதுதான் காரணம். கிளம்பும் நேரத்தில் வீணாகப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்று ஏற்கனவே பாலா எனக்கு அறிவுறுத்தியிருந்தபடியால், நான் குற்றவாளியைப் போல் பதுங்கிப் பேசிக்கொண்டிருந்தேன். ஊபர் எனது முன்பதிவைக் ‘கேன்சல்’ செய்துகொண்டே இருந்தபடியால் ‘ஓலா’வில் பதிவுசெய்திருந்தேன். ‘யுவர் ட்ரைவர் இஸ் ஆன் த வே’ என்று செயலி தெரிவித்தபோது நிம்மதியாக இருந்தது. காலையில் புதுவண்ணாரப்பேட்டையிலிருந்து செயலியில் பயண முன்பதிவு செய்வது பகீரதப் பிரயத்தனம் தான். வேறெங்கிருந்தும் வண்ணாரப்பேட்டைக்கு வர வேண்டுமென்றால் கேட்கவே வேண்டாம். ஒரு 10, 15 கேன்சலேஷன்களுக்குப் பிறகுதான் யாரேனும் ஒரு ஓட்டுநர் வருவார். ஒன்று, அவர் வண்ணாரப்பேட்டையைச் சுற்றியிருக்கும் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அல்லது, நாம் பரிதாபமாகக் கெஞ்ச வேண்டும். ஓலா வண்டி வந்திருந்த நேரத்தில் ஆசிரியையின் கைப்பேசி அணைந்துவிட்டிருந்தது. எனவே ஓ.டி.பி.யை அவரிடம் சொல்ல முடியவில்லை. மாணவன் ஒருவனின் கைப்பேசிக்கு அழைத்தால், “சொல்லுங்க சார், சார் கேக்கல சார். த்ரீ ஃபைவா?” என்று எண்களை மாற்றி மாற்றி உளறிக்கொண்டிருந்தான். “இதென்ன டா வம்பாப் போச்சு” என்று நானே நேரடியாகப் பள்ளியின் நுழைவாயிலுக்குச் சென்று ஓ.டி.பியைக் கூறி, மகிழுந்தில் அமர்ந்தேன். பெட்டிகள் அனைத்தையும் பின்புறம் வைத்துக் கிளம்ப எத்தனித்தபோதுதான் அச்சம்பவம் நடந்தது.

தலைமையாசிரியை வண்டியின் முன் நின்று போக விடாமல் தடுத்தார். நான் வந்து நின்றிருப்பதையும், வண்டியில் எறி அமர்வதையும் பள்ளியின் முதல் மாடியில் இருந்த தன் அறையிலிருந்து பார்த்திருக்க வேண்டும். “கீழ எறங்குங்க எல்லாரும்” என்று சத்தமிட்டார். தயங்கியபடியே இறங்கிய ஆசிரியையையும், மாணவர்கள் நான்கு பேரையும் பார்த்து, “நீங்க போறதுக்கு எதுக்கு இந்தாளு? யாரு இவன்? ஸ்கூல்ல இருந்து போன வருஷம் ஓடிப் போனவன்தானே? என்னப்பா, என் கொழந்தைங்களக் கடத்திட்டுப் போக வந்திருக்கியா?” என்று பொரிந்தார். இதற்குள் கூட்டம் கூடி விட்டிருந்தது. எனக்கு சற்றே அவமானமாகி விட்டது. ”மிஸ், மைண்ட் யுவர் வேர்ட்ஸ். இதே ஸ்கூல்ல இதே பசங்களுக்குப் போன வருஷம் க்ளாஸ் எடுத்தவன் நான். கடத்தணும்னு எந்த அவசியமும் இல்ல. என்னைப் பத்தி அவங்களுக்கும் அவங்க பேரண்ட்ஸுக்கும், பசங்களுக்கும் நல்லாவே தெரியும். அவங்க என் பசங்க” என்று நானும் சற்றே வெடித்திருந்தேன். “என் பசங்க” என்பதிலிருந்த அழுத்தம் அவரை மேலும் சீண்டியிருக்க வேண்டும். “என்ன பாத்துட்டிருக்கீங்க வாட்ச்மேன்? இவன வெளிய போச்சொல்லுங்க” என்றார். வாட்ச்மேன் பாய் எனக்கு நன்கு தெரிந்தவர். அவரிடம் பேசிப் புரிய வைக்கலாம், புரிந்துகொள்ளக் கூடிய ஆள்தான் அவர். “பாய், உங்களுக்கே தெரியும்” என்று நான் பேச ஆரம்பித்தபோது அவரும் என் நெஞ்சைப் பிடித்துப் பின் தள்ளினார். “போயிடுங்க சார்” என்று அவர் சொன்னபோது, ஒரு நிமிடம் உலகம் நின்றிருந்தது (ஆம், திரைப்படங்களில் காண்பிப்பது போலவே, உதிரும் இலைகள் அந்தரத்தில் தொங்கின, பறக்கும் பறவைகள் சட்டென நின்றன, ஓடிக்கொண்டிருந்த மாணவர்கள் புகைப்படமாய் உறைந்தனர்). அனைவரையும் ஒரே அடியில் கீழே தள்ள வேண்டும் என்ற சூடு தலைக்கேறிக்கொண்டிருந்தது. “இங்க இருந்து பஸ்ஸுல தானே போகச் சொன்னேன் உங்கள? சொகுசு கேக்குதா?” என்று ஐவரையும் பார்த்துக் கத்திக்கொண்டிருந்தார் தலைமையாசிரியை. திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன். வீட்டிற்குச் செல்லும் வழியில் அழுகை முட்டியது. பல்லைக் கடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். வழக்கமாக பன்னிரண்டிலிருந்து பதினைந்து நிமிடங்கள் பிடிக்கும் நடை, அன்று சற்றேறக்குறைய ஏழு நிமிடங்களாகக் குறைந்திருந்தது. கோபத்தில் அதிகம் பசிக்கும் என்பார்கள். என் சிறிய குடலின் அளவுக்குப் பசி எல்லாம் வருவதில்லை. வேகம்தான் வருகிறது உடலில் என்று நினைத்துக்கொண்டேன். வீட்டை அடைந்தவுடன் கதவை அடைத்து, ஓவென்று அழுதேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது. தூங்கிவிட்டிருந்தேன். எழுந்தபோது மணி பன்னிரண்டரையைத் தாண்டிவிட்டிருந்தது.

09 ஜனவரி — இரவு 08:30 மணி

“சார், மிஸ் கெளம்பி எங்கேயோ போயிட்டாங்க சார். கேர்ள்ஸ் ரெண்டு பேரும் அவங்க ரூம்ல தனியாத்தான் இருக்காங்க” என்று மாணவன் தொலைபேசியில் கூறியபோது, அதை அலட்சியமாகத் தான் எண்ணினேன். “ரெஸ்ட்ரூம் போயிருப்பாங்களா இருக்கும்டா. சரி, நான் கேர்ள்ஸ்ட்ட பேசுறேன்” என்றபடி இணைப்பைத் துண்டித்தேன்.

மாணவி ஒருவரைக் கைப்பேசியில் அழைத்தபோது அவர் மாணவனது கூற்றை மறுமொழிந்தார். “மெஸ்ல சாப்பிட்டுட்டிருந்தோம் சார். சாப்பிடும்போதே அவங்க எங்கேயோ சொந்தக்காரங்க வீட்டுக்குப் போணும் லோக்கல்லன்னு சொல்லிட்டிருந்தாங்க. வேகமா சாப்பிட்டுட்டு எங்களுக்கு முன்னாடி ரூமுக்கு வந்தாங்க. சந்தேகப்பட்டு நாங்களும் சாப்பிட்டுட்டு ரூமுக்கு வந்தப்போ அவங்க ரூமை விட்டு வெளிய வந்தாங்க கையில ஒரு சின்ன லக்கேஜோட. எங்க மிஸ் போறீங்கன்னு கேட்டதுக்கு, பக்கத்துலதான் சொந்தக்காரங்க வீட்டுக்கு. நைட் வந்துடுவேன்னு சொன்னாங்க. கையில பேக் இருந்துச்சு சார். ஏன்னு கேக்கல நாங்க. பயமா இருக்கு சார். உள்ள போயிட்டுப் பாத்தா அவங்க மொபைல இங்கயே வெச்சுட்டுப் போயிருக்காங்க. வேற அவங்க பொருள் ஒண்ணுமே இங்க இல்ல” என்று உடைந்தார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. காலையில் நான் செய்த கிறுக்குத்தனத்தின் விளைவுதானோ என்று மனம் கணக்கிடத் தொடங்கியிருந்தது. “பதட்டப் படாதீங்க. டூ மினிட்ஸ்ல திரும்ப கால் பண்றேன்” என்றபடி துண்டித்தேன். பாலாவுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னபோது, “ஹெச். எம். அந்த இஷ்யூவப் பெருசாக்கிருப்பாங்க. மிஸ் நம்மளோட சேந்து கேம் ஆடுறதா நெனச்சு ஏதாச்சும் ரெகுலேட்டரி ஆக்‌ஷன் எடுப்பேன், கம்ப்ளெய்ன் குடுப்பேன் மேலிடத்துலன்னு சீனப் போட்டிருப்பாங்க. அதான் அந்தம்மா பயந்திருப்பாங்க. இது கொஞ்சம் பிரச்சனைதான். இருந்தாலும் காலையில வரைக்கும் என்ன நடக்குதுன்னு பாக்க வேண்டியதிருக்கு. அது வரைக்கும் பொறுமையா இருப்போம். எல்லாரையும் பயப்படாமத் தூங்கச் சொல்லு. நீ டச்லயே இரு. தூங்கிடாத” என்றார்.

மீண்டும் அவர்கள் அனைவருக்கும் கான்ஃப்ரன்ஸ் அழைப்பில் பேசி நிலைமையை விளக்கினேன். ஆனால் அதற்குள் பிரச்சனை பெரிதாகியிருந்தது. “சார், இந்த ஹாஸ்டல் ப்ளாக் வார்டன் வந்தாங்க. எங்க உங்க மிஸ்ஸு. எப்போ கெளம்பப் போறீங்கன்னு கேட்டாங்க. மத்த எல்லா ஊர் டீமும் இன்னைக்கு நைட்டோடக் கெளம்பிட்டாங்க சார். நாங்க மட்டும் தான் இந்த ப்ளாக்லயே தனியா இருக்கோம். பயமா இருக்கு சார். பயத்துல மிஸ் ரெஸ்ட்ரூம் போயிருக்காங்கன்னு வார்டன் மேடம் கிட்டப் பொய் சொல்லிட்டோம்” என்று கலங்கினார் ஒரு மாணவி. நிலைமை எல்லைமீறிப் போயிருப்பதை உணர்ந்த நான், “சரி பரவாயில்ல. எப்புடியும் நைட் வந்துடுவேன்னு தானே சொல்லிருக்காங்க? வந்துடுவாங்க. பயப்படாதீங்க. கதவை உள்பக்கம் தாப்பா போட்டுட்டுப் படுங்க எதையும் யோசிக்காம. பயமா இருந்தா லைட்ட ஆன்லயே வெச்சுட்டு தூங்குங்க” என்றேன்.

எனக்கும் உள்ளூறப் பயம்தான். மாணவர்கள் தூங்கிவிட்டனர் போலும். மாணவிகள் இருவரும் தூங்கவில்லை. பன்னிரண்டு மணியளவில் ஒரு முறையும், இரண்டு மணியளவில் மற்றொரு முறையும் அழைத்துப் பேசினர். நான்கு மணி வரை கொட்டக்கொட்ட முழித்திருந்த எனக்கு அதற்கு மேல் பொறுக்கவில்லை. என்னையே அறியாமல் உறங்கிவிட்டேன். வினாடி-வினாவின் அரையிறுதிச் சுற்றில் தோற்ற வருத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அதைக்காட்டிலும் பெரியதொரு சோதனை வந்து தோல்வி துக்கத்தை மாணவர்கள் மறக்கும்படி செய்திருந்தது.

10 ஜனவரி 2020 — காலை 06:30 மணி

“குட் மார்னிங் சார். நான் இங்க ஹாஸ்டல் வார்டன் பேசுறேன்” — கைப்பேசியின் அலறல் ஓசை என்னை எழுப்பியிருந்தது. இரண்டரை மணிநேர உறக்கம் நிச்சயமாகப் போதவில்லை. மண்டை விண்விண்ணென்று தெறித்துக்கொண்டிருந்தது. எனினும் சூழ்நிலையின் முக்கியத்துவத்தை மூளை வாய்க்குப் புரிய வைத்துவிட்டிருந்தபடியால், “குட் மார்னிங் மேடம், சொல்லுங்க” என்றேன். அவர் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்த கதையை முழுதாக விளக்கிவிட்டு, “என்ன சார் இவ்ளோ இர்ரெஸ்பான்ஸிபிளா இருக்காங்க. அட் லீஸ்ட் சொல்லிட்டாச்சுப் போக முடியாதா?” என்று அக்கறையாகவே விசாரித்தார். அவர் அச்சூழ்நிலையில் எளிதாக என்னிடம் கத்தியிருக்க முடியும். ஆனால் சென்னையிலிருக்கும் ஆளால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது எனும் நிதர்சனத்தை உணர்ந்தவராகப் பேசினார். “சார், ஆக்சுவலா நேத்தைக்கு நைட்டே எல்லாரும் கெளம்பிருக்கணும். சரி, காலையில கெளம்பிருவோம்னு சொன்னதுனால தான் ஸ்டே பண்ண பெர்மிஷன் குடுத்தோம். ஹோப் யூ அண்டர்ஸ்டேண்ட்” என்றார் அவர். எனக்கு நிலைமை எல்லாம் புரிந்தது. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற கையறு நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். “ஐ வில் மேக் ஷ்யூர் மை ஸ்டூடண்ட்ஸ் டோண்ட் க்ரியேட் எனி ப்ராப்ளம் ஃபார் யூ மேடம். தே வில் லீவ் பை செவன் தர்ட்டி. யூ ஹேவ் மை வேர்ட்” என்றேன்.

அப்போதுதான் பொறி தட்டியது. மாணவியை அழைத்து, “மிஸ்ஸோட மொபைல் இருக்குன்னு சொன்னீங்கல்ல?” என்றேன். அவர் குழம்பியிருக்க வேண்டும். ”யெஸ் சார், இருக்கு” என்றார்.

“ஸ்மார்ட்ஃபோனா, பேஸிக் மாடலா?”

“பட்டன் ஃபோன் தான் சார்.”

“குட், அன்லாக் பண்ணுங்க.”

“பண்ணிட்டேன் சார்.”

“காண்டேக்ட்ஸ்ல ஸேர்ச் பண்ணுங்க. ஹஸ்பண்ட், ஹோம் அந்த மாதிரி பேருல எதாச்சும் இருக்கான்னு பாருங்க சீக்கிரம்.”

“மை ஹஸ்பண்ட்ன்னு ஒண்ணு இருக்கு சார்.”

“கால் பண்ணுங்க அந்த நம்பருக்கு.”

”யெஸ் சார், பேசிட்டுச் சொல்றேன்.”

அவர் இணைப்பைத் துண்டித்தவுடன் மாணவர்களுக்கு அழைத்து, “சீக்கிரம் குளிச்சிட்டு ரெடி ஆயிடுங்கடா. லக்கேஜ் எல்லாம் பேக் பண்ணிட்டு மெஸ்ஸுக்குப் போங்க. ரெஸ்ட்ரூம் எல்லாம் யூஸ் பண்ணணும்னா இப்பவே பண்ணிக்கோங்க. கேர்ள்ஸும் இப்போ சாப்பிட வருவாங்க. நாலு பேரும் ஒண்ணாவே இருங்க மிஸ் வர்ற வரைக்கும்.”

“மிஸ் வருவாங்களா சார்?”

“வந்துடுட்டிருக்காங்கடா” — ஏன் அந்தப் பொய்யைச் சொன்னேன் என்று தெரியவில்லை. ஆனால் சொன்னவுடன் அவர்கள் தெம்பானது புரிந்தது. எனக்கும் இனம்புரியாத ஒரு தைரியம் வந்துவிட்டிருந்தது.

மாணவி அழைத்தார். “சார், பேசுனோம். அவரும் அவங்க கூடதான் இருக்காரு. ரெண்டு பெரும் வந்துடுவோம் வந்துடுவோம்னு மட்டும் சொல்றாங்க. எப்போன்னு சொல்ல மாட்டேன்றாங்க.”

“ஒண்ணு செய்ங்க. வார்டன் மேடம்ட்ட அந்த நம்பரைக் குடுத்துப் பேசச் சொல்லுங்க. மத்தது எல்லாம் தானாவே நடக்கும்.”

நான் சொன்னபடியே தானாக நடந்தது. ஏழு இருபதுக்கு கல்லூரியை அடைந்திருந்தார் ஆசிரியை. ஏன் அப்படி ஒரு அரைக்கிறுக்குத்தனத்தைச் செய்தார் என்று தெரியவில்லை. அவர் மேல் ஒழுக்கமின்மை நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளைச் சென்னைக் கல்வி அலுவலகத்திற்குத் தெரிவித்துவிட்டதாக வார்டன் மேடமும், அவரது மேலாளரான எக்ஸிக்யூட்டிவ் வார்டனும் கூறினர். மாணவன் ஒருவனிடம் நடந்ததை நடந்தவாறே அவனது கைப்பட எழுதுமாறு கூறி வாங்கிகொண்டு அனுப்பி வைத்தனர்.

“ஹப்பாடா முடிஞ்சதுடா” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் நான். சொல்லத்தெரியாத ஏதோ ஒரு வெற்றியுணர்வு என்னுள் துளிர்விட்டிருந்தது.

10 ஜனவரி 2020 — மதியம் 12:30 மணி

“தம்பி, உன்னைத் தேடி போலீஸ் வந்திருந்தாங்கப்பா” — பத்து மணிக்கு வெளியே சில வேலைகளுக்காகச் சென்றுவிட்டுத் திரும்பியபோது நான் கேட்ட முதல் வாக்கியம் இதுதான். சொன்னவர் வீட்டு உரிமையாளர். ஒரு நிமிடம் முகம் வெளிறியது. உறுதிசெய்துகொள்வதற்காக, “என்னம்மா?” என்று கேட்டேன். மீண்டும் தெள்ளத்தெளிவாக அதையே கூறினார்.

“எதுவும் சொன்னாங்களாம்மா? எந்த ஸ்டேஷன்னு கேட்டுக்கிட்டீங்களா? நம்பர் எதுவும் குடுத்துருக்காங்களா?” — அசுர வேகத்தில் கேள்விகள் சரமாரியாக வந்து விழுந்தன. ஓனர் அம்மா கடுப்பாகியிருக்க வேண்டும். “அதெல்லாம் ஒண்ணும் தெரியாது தம்பி. வீட்டுக்குப் போலீஸ் வர்ற அளவுக்கு எல்லாம் இது வரைக்கும் யாரும் வெச்சுக்கிட்டதில்ல. பாத்துக்கோங்க” என்றபடி விறுவிறுவென்று படியேறி மாடியில் அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டார். நான் நுழைவாயிற்கதவிற்கருகிலேயே நின்றபடி இருந்தேன். கண்கள் இலக்கின்றி எதையோ மங்கலாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. “சார், கொரியர்” என்றபடி செந்தில் அண்ணன் அழைத்தவுடன்தான் நினைவு திரும்பியவனாக கையெழுத்திட்டு வாங்கினேன். “என்ன சார், ஒரு மாதிரியா இருக்கீங்க?” — ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு தபாலாவது எனக்கு வந்தவண்ணம் இருந்தபடியால் அண்ணன் சகஜமாகப் பேசுமளவிற்குப் பழக்கமாகிவிட்டிருந்தார். எனினும் பார்த்தவுடன் எனது திகைப்பைக் கண்டுபிடித்துவிடும் அளவிற்கு என்ன் முகபாவனை அவ்வளவு மாறியிருந்தது என்பதை அவரது கேள்வியில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. “ஒ… ஒண்ணுமில்லண்ணே. கொஞ்சம் ஒடம்பு செரியில்ல” என்றேன். வழக்கமான சம்பிரதாயப்படி ஒரு டம்ளர் தண்ணீர் பருகிவிட்டுக் கிளம்பினார் அண்ணன்.

“அண்ணே, ஒரு நிமிஷம்”

“சொல்லுங்க சார்.”

“இங்க பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் எதுண்ணே?”

“ஹெச்-3 சார். இன்னா மேட்டரு?”

“ஒண்ணுமில்லண்ணே. பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் இருக்கு. அதான்.” — சுதாரிக்காமல் பொய் சொன்னேன்.

“ஓ செரி செரி சார்” என்றபடி நடையைக் கட்டினார்.

அவர் சென்றவுடன் பாலாவை அழைத்து விவரத்தைக் கூறிவிட்டு, ஹெச்-3 போலீஸ் ஸ்டேஷன் செல்லவிருப்பதாகக் கூறினேன். “அப்புடியே ஹெச்.எம். கம்ப்ளெய்ன் குடுத்துருந்தாலும் வீட்டு அட்ரஸ் எப்புடிப்பா தெரிஞ்சிருக்கும்? அது மட்டுமில்லாம உன்னைய இப்ப கோத்து விட்டா அந்த மிஸ்ஸுக்கும், அவங்கள அனுப்பி வெச்ச குத்தத்துக்கு ஹெச்.எம்.முமேதானே மாட்டுவாங்க? என்னமோ இடிக்குது. நீ சொல்றது கரெக்ட்தான். ஸ்டேஷன் போயிட்டு என்னன்னு பாத்துட்டு வந்துடு” என்றார். அவர் சொன்ன பிறகுதான் எனக்கும் வீட்டு விலாசம் பற்றிய கேள்வி எழுந்தது. முந்தைய நாள், நான் சென்ற ஆண்டு வேலை செய்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடமும் என்னைப் பற்றித் தலைமையாசிரியை புகார் தெரிவித்ததாகக் கூறியிருந்ததை வைத்துப் பார்த்தபோது அவர்களிடம் விலாசம் வாங்கியிருக்கக் கூடும் என்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருப்பதாகத் தோன்றியது.

ஹெச்-3 காவல் நிலையத்திற்குச் செல்லும் வழியிலெல்லாம் பல குழப்பங்கள். தூக்கமின்மையால் கண்கள் எரியத் தொடங்கியிருந்தன. தலை மேலும் கீழுமாகக் குதித்து ஆடுவது போல் கனமாயிருந்தது. காவல் நிலையத்தில் விசாரித்தபோது அங்கு அந்நேரத்தில் இருந்தவர்கள் யாருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்றே தெரியவிலை. “யார்ரா இவன் தானா ஸ்டேஷனுக்கு வந்து தேவையே இல்லாம மாட்டிக்கிறான்!” என்ற கோணத்தில் என்னை அணுகினார்கள். விசிட்டிங் கார்டையும், அடையாள அட்டையின் நகலையும் ஒப்படைத்து விட்டுத் திரும்பினேன். வரும் வழியில் குழப்பம் இன்னும் அதிகரித்திருந்தது. ”ஒருவேளை உண்மையிலேயே அந்நிலையத்திலிருந்து யாரும் வந்திருக்கவில்லையென்றால்? வேறு ஸ்டேஷனாக இருந்தால்? திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒருமுறை சரிபார்த்து விடலாமா?” என்று பல்வேறு கேள்விகள் இட்லி-வடையின் மணத்தைப் போல மனத்தைச் சூழ்ந்திருந்தன. பாலாவிடம் கேட்டபோது, ‘அதான் கார்ட் குடுத்துட்டு வந்திருக்கல்ல? நாளைக்குக் காலையில வரைக்கும் வீட்டுலயே இரு. ஓனர் கிட்டத் தெளிவா எடுத்துச்சொல்லு. அடுத்த முறை தப்பித் தவறி நீ இல்லாத நேரமாப் பாத்துப் போலீஸ் வந்தாங்கன்னா உனக்கு உடனே இன்ஃபர்ம் பண்ணச் சொல்லு. வர்றவங்க டீட்டெய்ல்ஸ் எதாவது வாங்கி வைக்க சொல்லு” என்று வரிசையாகக் கட்டளைகளைப் பறக்க விட்டுக்கொண்டிருந்தார். அவர் சொல்வது சரியெனவே பட்ட்து.

11 ஜனவரி — காலை 09:20 மணி

“ஹலோ, கிரிதரனா?”

“யெஸ். நீங்க?”

“ஹெச்-3 ஸ்டேஷன்ல இருந்து பேசுறோம். வீட்டுல இருக்கீங்களா?”

“யெ… யெஸ் சார், யெஸ் சார். வீ… வீட்டுல தான் இருக்கேன்.”

“ஓகே. ஒரு ஒன் அவர்ல வருவோம். வீட்டுலயே இருங்க. ஒரு என்க்வயரி இருக்கு.”

“சரி சார். சார், எனி ப்ராப்ளம்?”

பதில் இல்லை. இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது. உடல் முழுவதும் நடுங்கத் தொடங்கியிருந்தது. மடக் மடக்கென்று கிட்டத்தட்ட ஒண்ணரை லிட்டர் தண்ணீரை அருந்தினேன். என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. திரும்ப அழைப்பதா வேண்டாமா என்றும் முடிவு செய்ய முடியவில்லை. அதிகப்பிரசங்கித்தனமாக ஏதேனும் செய்து பிரச்சனையைப் பெரிதாக்கிவிடக் கூடாது எனும் எச்சரிக்கையுணர்வும் கூடவே வந்து ஒட்டிக்கொண்டது. அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தேன் கூடத்தில். பதற்றத்தில், “மாட்டே வினதுகா”, “ஜீவாம்ஷமாயி”, “பவிழ மழையே”, “கண்கள் இரண்டால்” என்று அனைத்துப் பாடல்களும் ஓரிரு வரிகளாக வந்து மறைந்து மாறியபடியே இருந்தன. பாடல்களைச் சீழ்க்கையடிக்க முயன்றால் வாயிலிருந்து வெற்றுக்காற்றுதான் வெளியே வந்தது. எனது பயத்தை நானே அதிகரித்துக்கொண்டிருந்தேன். தலையின்மேல் யாரோ ஏறி நின்று மத்தளம் அடித்து விளையாடுவது போலிருந்தது. உடல் கனம் கூடி நடக்கவே முடியாதவாறு கால்கள் பின்னிக்கொள்வதைப் போல் தோன்றியது. மின்விசிறியை அணைத்த பின்பும் கூடப் பயங்கரமாகக் குளிர் வீசுவது போல் உடல் சில்லிடத் தொடங்கியது. ஸ்வெட்டர் ஒன்றை அணிந்து கொண்டேன். உடல் நடுக்கத்தைக் குறைக்கவும், சற்றே உடல்வாகைக் கம்பீரமாகக் காண்பிக்கவும் அது உறுதியாக உதவியது என்றே சொல்ல வேண்டும்.

சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வந்தனர் இரு அதிகாரிகள். கான்ஸ்டபிள்களாக இருக்க வேண்டும் என்று எடைபோட்டேன். “நீங்க தான் கிரிதரனா?”

“யெஸ் சார். வாங்க.”

“இருக்கட்டும். லட்சுமி கோவில்ல வாசிப்பு ட்ரஸ்ட்ல மேனேஜரா இருக்கீங்க.”

“ஆமா சார். கரெக்ட்.” — குரல் சற்றே உடைந்து விம்மியது.

“எவ்ளோ நாளா அங்க வேலை செய்யுறீங்க?”

“மே 2019-ல இருந்து சார். என்னாச்சு?”

“எத்தன பசங்க படிக்கிறாங்க? — “என்னாச்சு” எனும் கேள்வி கண்டுகொள்ளப்படவில்லை.

“முப்பத்திரெண்டு பேரு சார்.”

“இந்த ஸ்டேட்மெண்ட் உங்களுதா பாருங்க.”

அவர்கள் கொடுத்த காகிதம் நான் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருந்த கடிதத்தின் நகல். “ஆமாம் சார்.”

“இந்த அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் உங்களுதா பாருங்க.” — அவர்கள் இப்போது கொடுத்த காகிதம் எனது வங்கிக்கணக்கின் கடந்த மாத வரவு, செலவு விவரங்கள். “என்னுது தான் சார்.”

“ஓகே. ஜஸ்ட் ஒரு வெரிஃபிகேஷன்தான். பண மோசடி நடக்குதான்னு பாக்குறதுக்கு ரெட் ஃப்ளேக் அக்கவுண்ட்ஸ் எல்லாம் பேக்கிரவுண்ட் செக் பண்ணுவோம். அதுக்குத்தான். இதுல ஒரு கையெழுத்து போடுங்க.” — திடீரென்று வானத்தில் மிதப்பதைப் போல் தோன்றியது எனக்கு. பிரச்சனை எளிதாக முடிந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், பிரச்சனையே இல்லை. அவர்கள் நூறு கையெழுத்து கேட்டிருந்தால் கூட ஓயாமல் நிதானமாக அனைத்தையும் போட்டுக்கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பேன். அவர்களிடம் காகிதங்களை நீட்டினேன்.

“தேங்க்ஸ் தம்பி. வேற எதாவதுன்னா கால் பண்ணுவோம். ஸ்டேஷனுக்கு வந்து ரிட்டன் ஸ்டேட்மெண்ட் எழுதிக் குடுக்குற மாதிரி இருக்கும்.”

“ஷ்யூர் சார். இப்போ வரணுமா?” — இந்தத் தேவையில்லாத, அளவுக்கதிகமான பணிவு நடுத்தர வர்க்கத்திற்கே உரிய குணாதிசயம்.

”இல்ல. இப்போதைக்கு வெரிஃபிகேஷன் மட்டும்தான்” என்றபடி வாசல் கேட்டைப் படாரென்று திறந்து சென்றனர். தெருமுனை வரைக்கும் அவர்கள் சென்று மறைவதைப் பார்த்துக்கொண்டிருந்த நான், உற்சாக மிகுதியில் ஸ்பீக்கரில் பாடல்களைச் சத்தமாக ஒலிக்க (அலற) விட்டவாறு உடை மாற்றினேன். சற்றே நிதானித்த பிறகுதான் ஓனரிடமும், பாலாவிடமும் விஷயத்தைக் கூறினேன். அளவிற்கு அதிகமாக அரிசி வைத்து வயிறு முட்டச் சாப்பிட்டேன். அவ்வளவு பசி.

23 மார்ச் 2020 — காலை 09:51 மணி

வங்கிக் கணக்குப் பிரச்சனைக்காக என் வீட்டிற்கு வந்து போன இருவரில் ஒருவரைத்தான் நான் ஹெச்-3யில் நேருக்கு நேராகச் சந்தித்தேன்.

“என்னய்யா, இப்போ என்ன பிரச்சனை? சும்மா இருக்க முடியாதா?” என்றார். கையில் சில பல காகிதங்கள் இருந்தன. மேலோட்டமாகப் படித்துவிட்டு, “சூசைட் கேஸ் எல்லாம் வேற இருக்குதா?” என்றார். திருவொற்றியூர் காவல் நிலையத்திலிருந்து எனது ஜாதகத்தைத் திருப்பி விட்டிருந்தனர் என்று உணர சில நொடிகள் கூட ஆகவில்லை. “இல்ல சார், அது வந்து…”

“சரி சரி, ஐயா வரட்டும். உட்காரு போ.”

பாலாவிடம் அதுவரை நடந்தது அனைத்தையும் வாட்ஸப்பில் தட்டச்சு செய்து அனுப்பிக் கொண்டிருந்தேன். “நாம தப்பா எதுவுமே பண்ணல. பயப்படாத. எதாவது பிரச்சனைன்னா எனக்கு உடனே ஃபோன் பண்ணு. உனக்கு நான்தான் மேனேஜர்னு சொல்லு. விஷயத்தை ஸ்ட்ரெய்ட்ஃபார்வேர்டாச் சொல்லு. சுத்தி வளைக்காத. ஒண்ணும் ப்ராப்ளம் ஆகாது. வழக்கம் போல எழுதிக் குடுக்க சொல்லிட்டு விட்டுடுவாங்க” என்றார்.

“சூசய்ட் அட்டெம்ப்ட்ல இருந்து மணி லாண்டரிங் வரைக்கும் ஒண்ணா சேந்து காம்ப்ளிகேட் ஆயிட்டிருக்கு போல. ஹோப்ஃபுலி, எவ்ரிதிங் கோஸ் ஃபைன்.”

“ஷிட். அதை நான் யோசிக்கவே இல்ல. செரி, பாப்போம். பதட்டப் படாத. உன் ஃபோக்கஸ டைவர்ட் பண்ணு. எதாவது படிக்க ஸ்டார்ட் பண்ணு மொபைல்லயே. கோவிட் ஆர்ட்டிக்கிள்ஸ் படிக்குறத நிறுத்து.”

“சரி, பாலா. ஐ வில் கீப் யூ போஸ்டட்.”

அரை மணிநேரம் கடந்து, ஒரு மணிநேரம் தாண்டி, ஒன்றரை மணிநேரமும் ஆகிவிட்டிருந்தது. மணி பதினொன்றரையைத் தாண்டியிருந்தது. ‘ஐயா’ வந்தபாடில்லை. பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. காலையில் குடித்த ஒரு டம்ளர் பாலோடு சரி. வேறு எதுவும் சாப்பிடுவதற்கு நேரமும் கிடைக்கவில்லை. மெதுவாகத் தயங்கித் தயங்கி, “சார், சாப்பிட்டுட்டு வந்துரட்டுமா?” என்றேன்.

“சும்மா உக்கார முடியாதா உன்னால?” என்று ஒருவர் உறுமினார். சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. பாலாவிடம் அனைத்து எரிச்சலையும் கொட்டிக்கொண்டிருந்தேன். “சாவடிக்கிறாங்க. ஐயா எப்போ வரப்போறாருன்னும் தெரியல” என்ற என்னுடைய தகவலுக்கு, “செக்கரெட்ரியேட்ல எதோ முக்கியமான மீட்டிங்காம் இன்னிக்கு மதியம். மேபி, அதுனால ஆளுங்க கம்மியா இருப்பாங்க. வெயிட் பண்ணுப்பா. வேற வழியில்ல” என்று பதில் வந்தது (அந்த மீட்டிங்கின் விளைவாகத் தான் தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய ‘லாக்டவுன்’ அமலுக்கு வந்தது. பிறகு மறுநாள் இரவு எட்டு மணிக்கு ஜிப்பாக்கார்ர் வந்து அதை நாடு முழுமைக்குமானதாக மாற்றியது தனிக்கதை).

ஒருவழியாக மதியம் இரண்டேமுக்கால் மணியளவில் ‘ஐயா’ வந்தார். எனக்கு முன்னால் ஒரு லாரி ஓட்டுநர் எதற்கோ திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அவ்வளவு பசியில் உடல் வலுவிழந்திருந்தபோது கூட பயத்தில் மறுபடியும் உடல் உஷாரானது. என் முறை வந்தபோது, கான்ஸ்டபிள் புகாரை விளக்கினார். “யோவ், சும்மா தாலி அறுக்காதீங்கய்யா. தெறக்கக் கூடாதுன்னு ஒரு தடவ சொன்னாப் புரியாதா? நீ பசங்களக் கூப்பிட்டியா, இல்லையான்றதெல்லாம் தேவையில்லாத விஷயம். தெறக்கக் கூடாது. அவ்ளோதான். புரிஞ்சதா?” அவரது கேள்விக்கு மண்டை தானாகவே ஆமாம் என்ற தொனியில் ஆட ஆரம்பித்திருந்தது. “இனிமே ஓப்பன் பண்ண மாட்டேன்னு எழுதிக் குடுத்துட்டுக் கெளம்பு” என்றபோது போன உயிர் திரும்பி வந்தது. வேகமாக எழுதிக் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன். ஷேர் ஆட்டோ ஏறியபோது, ‘காதலே காதலே’ என்று சின்மயி உருகிக்கொண்டிருந்தார். பதிலுக்கு நான், “காவலே காவலே உசுரெடுக்குறியேஏஏஏஏ… போகவா போகவா நானும் நானும்” என்று யாரிடமோ பாடிக்கொண்டிருந்தேன்.

First published in Pens Turf on March 31, 2020

--

--